> குருத்து

March 22, 2024

Attam (2023) மலையாளம்


கேரளாவைச் சார்ந்த ஒரு நாடகக் குழு. ஒரு மேடை நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு தம்பதியினர் அந்த குழுவை பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விருந்து தர விரும்புகிறார்கள்.


ஒரு ரிசார்ட்டில் கூடுகிறார்கள். பெரும்பாலோர் தண்ணியடிக்க, விருந்து முடிகிறது. இரவு 2.30 மணியளவில் குழுவில் உள்ள ஒரு பெண் அறையின் சன்னலை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பொழுது, குழுவில் உள்ள ஒருவர் பாலியல் சீண்டல் செய்துவிடுகிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவில் உள்ள தன் ’காதலனிடம்’ சில நாள்கள் கழித்து தெரிவிக்கிறார். குழுவில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சினிமா நடிகர் இருக்கிறார். அவர் போட்டிருந்த சென்ட், உருவத்தைக் கொண்டு அவராகத் தான் இருக்கும் என சந்தேகிக்கிறார். காதலன் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்கிறார்.

இந்தப் பிரச்சனையை குழுவிலேயே பேசி தீர்த்துவிடுவது நல்லது. வெளியே போலீசு, வழக்கு என போனால், குழுவின் பெயர் கெட்டுப்போய்விடும் என அஞ்சுகிறார்கள்.

குழு கூடுகிறது. அந்த நடிகரால் கலந்துகொள்ள இயலவில்லை. அவரைத் தவிர மற்ற குழு ஆட்கள் விவாதிக்கிறார்கள். பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணையும் அழைக்கிறார்கள்.

ஒரு வீட்டில் கூடி விவாதிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள் விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இறுதியில் என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***


படம் எடுத்த விதத்தில் 1950களில் வெளிவந்த “12 Angry Men” படத்தை நினைவுப்படுத்துகிறது. ஒரு வழக்கு குறித்து, 12 ஜூரிகள் விவாதித்து ஒத்த கருத்துக்கு வரவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துவிடும். அவர்கள் விவாதித்து ஒத்த முடிவுக்கு வருவது தான் முழுப்படமும். அருமையான படம்.

ஒரு முக்கியப் பிரச்சனை. கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். காதலனுக்கு இருக்கும் ஒரு மறைமுக அஜண்டாவில் ஒரு முன்முடிவோடு துவங்கும் விவாதம், பிறகு ஒரு திருப்புமுனைக்கு பிறகு அவர்களின் மனநிலை எப்படி சாய்கிறது? எந்த திசையில் விவாதம் செல்கிறது? பெண்களைப் பற்றிய அவர்களுடைய பார்வை? எந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பதில் இருந்து நாம் நிறைய புரிந்துகொள்ள முடிகிறது.

படத்தின் இறுதியில் வர்க்க மனநிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. தங்களுக்கு வரும் பணபலன்கள், பிற பலன்களுக்கு ஏற்ப கருத்துகளை வளைப்பது, எளிய மக்கள் பெரும்பாலும் அப்படி செய்வதில்லை. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு வர்க்கம் மனநிலை தான் பெரும்பாலும் ஊசலாட்டத்துடன் இருப்பதை நான் என் அனுபவத்திலேயே கவனித்திருக்கிறேன். சமூகம் குறித்த அறிவியலும் அதைத்தான் சொல்கின்றன.

ஒரு பெண் தனக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்கும் பொழுது, அவளுடைய உடை, பழக்கவழக்கங்கள் என சிலர் கேள்விக்குள்ளாக்குவது அபத்தம். அப்பொழுதே சிலர் கண்டிக்கிறார்கள். படத்தின் கேரள பின்னணி என்பது இன்னும் சுவாரசியம். இப்படி ஒரு படம் தமிழில் வந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கிறேன்.

திரைப்பட நடிகர்கள், நிஜ நாடக நடிகர்கள் என கலவையோடு படத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். எல்லோருமே கொடுத்தப் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனந்த் ஏகர்ஷி இயக்கியிருக்கிறார்.

இது வழக்கமான படம் இல்லை. இந்த படம் திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்று, இப்பொழுது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளிவந்துள்ளது.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

Kung pu panda (2024)


வழக்கம் போல ஒரு டிராகன் வீரராய், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி உதவுகிறார். எதிரிகளை வீழ்த்துகிறார் பாண்டா கரடி

”இதுவரை டிராகன் வீரனாய் இருந்துவிட்டாய். அடுத்தப் பொறுப்புக்கு நகரவேண்டும். ஆகையால் மரபுப்படி புது வீரரை தேர்ந்தெடுக்கவேண்டும்” என மாஸ்டர் ஷிபூ கறாராக சொல்கிறார். “எனக்கு என்ன வயசாயிருச்சுன்னு இவ்வளவு அவசரப்படுறீங்க!” என்கிறது பாண்டா.

புதுவீரனை தேர்ந்தெடுக்கும் விழா நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் ஒரு புது வில்லி உருவெடுக்கிறார். பச்சோந்தி வடிவத்தில் இருக்கும் சூனியக்காரி. குறுக்கு வழிகளை கையாண்டாவது பலசாலியாகிவிட வேண்டும். சீனாவின் எல்லா பகுதிகளையும் தானே ஆளவேண்டும் என காய்களை நகர்த்துகிறது. நினைத்தப்படியே ஒவ்வொன்றாக முடித்தும் வருகிறது.

மிக மிக பலசாலியான வில்லியை எதிர்கொள்ள கிளம்பி போகிறார் பாண்டா. பழைய நண்பர்கள் எல்லாம் வேறு வேலையில் பிசியாக இருக்க இந்த முறை பாண்டாவிற்கு புதிய ”நண்பனாக” ஒரு பெண் நரி வருகிறது.

பையன் புதுப்பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவேண்டும். அவனுக்கு உதவலாம் என பிள்ளை சென்ற வழியில் அப்பாவும், வளர்த்த அப்பாவும் தேடிப்போகிறார்கள்.

பிறகு என்ன ஆனது என்பதை பல்வேறு கலாட்டாக்களுடன் சொல்லியிருக்கிறார்கள்.
****
ஒரு குழந்தையைப் போல கண்கள் விரிய பலவற்றையும் ஆச்சர்யமாய் பாண்டா பார்ப்பது ஆச்சர்யம். வில்லி தனது சக்தியை பயன்படுத்தி மிகப்பெரியதாய், கோர உருவமாய் எழுந்து நிற்கும் பொழுது, பயந்து போகாமல், “இது புதுசா, அற்புதமால்ல இருக்கு” என வாய்விட்டு பாராட்டுவது கல கல!

Zootopia வில் வரும் கல கல ஆண் நரியைப் போல, இந்தப் படத்தில் ஒரு கல கல பெண் நரியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நல்ல அறிமுகம் இனி வரும் படங்களில் தொடர்ந்து இந்தப் பாத்திரம் வரும். எதிர்பார்க்கலாம்.

படம் துவக்கம் முதல் இறுதி வரை தொய்வு இல்லாமல் போகிறது. வலுவான வில்லன், நகைச்சுவை காட்சிகள், சண்டைகள் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போல எனக்கு தோன்றியது. அது என்னவென்று யோசித்துகொண்டிருக்கிறேன். உங்களுக்கு தோன்றினால் சொல்லுங்கள்.

3Dயில் தமிழ் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு தேர்வு நடந்துகொண்டிருக்கும் பொழுது என்ன கணக்கில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியிட்டார்களோ தெரியவில்லை. 19/03/2023 அன்று மாலை காட்சியில் பத்து பேர் தான் இருந்தோம்.

பாருங்கள்.

Anweshippin Kandethum (2024)


காலம் 90. கோட்டயம். கல்லூரி சென்று திரும்பிய பெண்ணை காணவில்லை. புகார் வருகிறது. நாயகன் துணை ஆய்வாளராக இருக்கிறார். விசாரணையை துவக்குகிறார். ஒரு மத போதகரின் வீட்டு வாசலில் ஒருவர் கடைசியாய் பார்த்ததாய் சொல்கிறார். ஆனால் உள்ளே சென்று விசாரிப்பதற்கு உள்ளூரில் சிலர் தடுக்கிறார்கள்.


மேலதிகாரி யாரையாவது சிக்கவைக்க காய்கள் நகர்த்துகிறார். நாயகன் வேறு விதமாக யோசித்து உண்மையை நோக்கிப் போகிறார். குற்றவாளியை நெருங்கும் பொழுது, எதிர்பாராத சம்பவத்தால் அவரும் அவருடைய குழுவும் தண்டிக்கப்படுகிறார்கள்.

இன்னொரு வாய்ப்பு என இன்னொரு மேலதிகாரி ஒரு வழக்கைத் தருகிறார். ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். ஒரு புகழ்பெற்ற விசாரணை அதிகாரி அவரால் கண்டுபிடிக்க முடியாத விரல் விட்டு எண்ணக்கூடிய வழக்குகளில் இதுவும் ஒன்று. இது தவிர அடுத்து விசாரணை என ஊருக்குள் யார் வந்தாலும், நாங்கள் விடமாட்டோம் என உள்ளூர் மக்கள் கடந்த கால விசாரணையின் வெறுப்பில் இருக்கிறார்கள். ”உங்களால் ஏதாவது செய்யமுடிந்தால் செய்யுங்கள். இல்லையெனில் என்ன விசாரித்தீர்களோ! அதை எழுதித் தந்துவிடுங்கள்” என அனுப்பி வைக்கிறார்.

அந்த வழக்கை அவர்கள் விசாரித்து உண்மையை கண்டறிந்தார்களா? என்பதை சுவாரசியமாய் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
*****

ஒரு துணை ஆய்வாளருக்கு கிடைக்கும் வெளிச்சம். மேலதிகாரிகளுக்கு கடுப்பாகிறது. படத்தில் அதைத் தாண்டி செல்வதாக காண்பிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அதெல்லாம் சிரமம் தான்.

ஒரு கொலை. அதைத் தொடர்ந்து விசாரணை. கன்னாபின்னாவென்று டீல் செய்ததில், பாடியைப் பார்த்து சொன்ன ஒரு மனுசன், போலீசின் டார்ச்சரில் தற்கொலை செய்துகொள்கிறார். இப்படி போலீசின் அணுகுமுறையே அந்த கொலை வழக்கை கண்டுபிடிப்பதற்கு தடையாய் முன்வந்து நிற்கிறது. தண்டிக்கப்பட்ட நாயகனின் குழுவிலும் ஒரு போலீசு திமிரோடும், எப்பொழுதும் அடித்து நிமிர்த்தும் தன்மையோடு தான் நடந்துகொள்வார்.

இரண்டாவது வழக்கை விட முதல் வழக்கு விசாரணை சிறப்பு. இந்த படத்தின் இயக்குநரான டார்வின் குரியகோஸ்க்கு முதல் படம் என்கிறார்கள். தேறிவிட்டார் என சொல்லலாம். ஆனால் படம் ஆஹோ ஓஹோ என யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

டோவினோ தாமஸ், அவருடன் நடித்த நடிகர்களும் படத்திற்கு துணை நின்றிருக்கிறார்கள். படம் வெற்றி பெற்றதாய் சொல்கிறார்கள். இந்த விசாரணை குழு அடுத்த பாகத்திலும் வருவதற்கு லீட் தருகிறார்கள். சுவாரசியமான கதையோடு வரட்டும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மலையாளத்துக்கு நகர்ந்திருக்கிறார். வாழ்த்துகள்.

நெட் பிளிக்சில் கிடைக்கிறது. பாருங்கள்